ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு:
பொருளாதார கணக்கெடுப்பு என்பது வேளாண் மற்றும் வேளாண்மை அல்லாத நிறுவனங்கள் (பயிர் உற்பத்தி, மலைதோட்டப்பயிர், பொது நிர்வாகம், இராணுவம், கட்டாய சமூகப்பாதுகாப்பு ஆகியவை தவிர) உற்பத்தி சார்ந்த அல்லது சேவைகளுடன் தொடர்புடைய அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் கணக்கிடுதல் ஆகும்.
பொருளாதாரக் கணக்கெடுப்பு மாநிலத்தின் புவியியல் எல்லைக்குள் அமைந்திருக்கும் அமைப்புசாரா நிறுவனங்கள் உட்படஅனைத்து நிறுவனங்களின் எண்ணிக்கையினை வழங்குகிறது. பொருளாதாரக் கணக்கெடுப்பானது பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுவதற்கு மற்றும் செயல்படுத்துவதற்கு தேவைப்படும், தொழில் முனைவோர் குறித்த தரவு, நிறுவனங்கள் குறிப்பாக அமைப்புசாரா நிறுவனங்களின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு நிலை போன்ற பல்வேறு அடிப்படை விவரங்களை வழங்குவதாகும்.
பொருளாதாரக் கணக்கெடுப்பு மாநிலத்தின் அனைத்து நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் கட்டமைப்பு மாறிகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. மேலும் பொருளாதார நடவடிக்கைகளின் புவியியல் பரவல், நிறுவனங்களின் உரிமையாளர் வகை, பணியாளர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களை வழங்குகிறது, பொருளாதாரக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் விவரங்கள் மாநில மற்றும் மாவட்ட அளவில் சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுவதற்கு மிகவும் பயன்படுகிறது.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதுவரை 6 பொருளாதார கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மத்திய அரசால் இதுவரை நடத்தப்பட்டுள்ள அனைத்து பொருளாதாரகணக்கெடுப்புகளிலும் தமிழ்நாடு பங்குபெற்று உள்ளது. தற்போது நடைபெறுவது ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆகும்.
இந்திய அரசின் புள்ளிஇயல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தினால் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மாநில அளவில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பில் தொடர்புடைய மாநில துறைகளை ஒருங்கினைக்கும் துறையாக பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் செயல்படுகிறது. பொதுப்பணி மையம் மற்றும் இந்திய மின்ஆளுமை மையமும் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பை நிறைவேற்றும் நிறுவனமாக செயல்படுகிறது.
ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணியில் மேம்படுத்தப்பட்ட தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு தொழில் நுட்ப பணிகள் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பொது சேவை மையம், இந்திய மின்ஆளுமை சேவை மையம் - SPV என்ற நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. (இந்திய அரசின் அரசிதழ் எண் 1749, நாள் 13.06.2019-இன்படி).
கணக்கெடுப்பு பணி மற்றும் முதல் நிலை மேற்பார்வை பணி (100% மேற்பார்வை) பொது சேவை மையம், இந்திய மின் ஆளுமை சேவை மையம் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணியில் 10% மேற்பார்வைப்பணி, இரண்டாம் நிலை மேற்பார்வையாளர்களால் மேற்பார்வையிடப்படுகிறது. இரண்டாம் நிலை மேற்பார்வை பணியில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலக அலுவலர்கள், மாநில பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை மற்றும் மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணி தமிழ்நாட்டில் சுமுகமாக நடைபெற அரசாணை எண்.80, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள்(தவ) துறை, நாள்: 03.06.2019-இன் படி பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை, மாநில ஒருங்கிணைப்புக் குழு (SLCC), மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு (DLCC) – (சென்னை நீங்கலாக) மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைப்புக் குழு.
தமிழ்நாட்டில் ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு -2019 களப்பணி மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களால் 09.10.2019 அன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் துவக்கி வைக்கப்பட்டு, களப்பணி மற்றும் மேற்பார்வைப்பணி அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடைபெற்று வருகிறது.