பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)

 2019-2020 ஆம் ஆண்டு (பசலி 1429) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கைச் செய்யப்பட்ட பயிர்களுக்கு உதவி வேளாண் அலுவலர்களால் பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சராசரி விளைச்சல் விவரங்கள் கணக்கிடப்பட்டு, வறட்சி, வெள்ளம், புயல், போன்ற இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படும்போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும்போதும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையினரால் பயிர் 
அறுவடைப் பரிசோதனைகள் திட்டமிடப்பட்டு  மேற்பார்வையிடப்படுகிறது. 2019-2020 ஆம் ஆண்டுக்கு காரிப் பருவத்திற்கு 31 பயிர்களுக்கு 83,076 பரிசோதனைகளும், சிறப்பு பருவத்தில் 4 பயிர்களுக்கு 53,144 பரிசோதனைகளும் மற்றும் ராபி பருவத்தில் 34 பயிர்களுக்கு 1,12,048 பரிசோதனைகளும்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கைச் செய்யப்பட்ட பயிர்களுக்கு விளைச்சல் விவரங்கள் கணிக்கப்பட்டு தொடர்புடைய காப்பீட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தொடர்புடைய துறையினரால் ஒத்திசைவு செய்யப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்ட பயிர் பரப்பு விவரங்கள் ஒவ்வொரு பருவ இறுதியிலும் காப்பீட்டுக் கழகங்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.